வெற்றிவேற்கை (நறுந்தொகை)

தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை ஆகும், இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும். அதிவீரராம பாண்டியர் என்பர் இந்த நூலின் ஆசிரியர் ஆவார். இளைஞர்கள் நல்ல நெறிகளை அறிய வேண்டி நல்ல சொற்றொடர்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது. காலம் கி.பி. 11 அல்லது 12ம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.

கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கு அணிவோமே.
 

(விநாயகக் கடவுளின் பாதமலர்களை தலையில் சூட்டிக் கொள்வோமாக)

வெற்றிவேற்கை வீரராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவில்லாதவரே.

(கொற்கை நகரத்தின் அதிபனாகிய அதிவீரராம பாண்டியன் கூறிய இந்த நறுந்தொகையைக் கற்றுத் தங்கள் குறைகளைப் போக்கிக் கொள்வோர் குறைவின்றி வாழ்வர்.)

பாடல்கள்
  1. எழுத்தறி வித்தவன் இறைவ னாவான்.
    (கல்வி கற்பித்தவர்  இறைவன் ஆவார்  )
  2. கல்விக் கழகு கசடற மொழிதல்.
     (குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.)
  3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
    (சுற்றத்தோடு கூடிய பெருங்குடும்பத்தை தாங்குவதே  செல்வர்க்கு அழகு)
  4. வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்.
     (வேதம் ஓதுவதும், ஒழுக்கத்தோடு இருப்பதுமே பிராமணர்களுக்கு அழகு)
  5. மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை.  
    (நீதி தவறாது முறையோடு அரசு செய்வதே அரசர்க்கு அழகு)
  6. வைசியர்க்கு  கழகு வளர்பொரு ளீட்டல்.  
    (குன்றாத செல்வத்தை சேர்ப்பதே வணிகர்க்கு  அழகு)
  7. உழவர்க் கழகு இங்கு  உழுதூண் விரும்பல்.  
    (விவசாயம் செய்து உண்பதே உழவர்க்கு அழகு)
  8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல். 
    (எதிர்காலத்தில் நிகழப்போவதை  முன்கூட்டியே ஆராய்ந்து உரைப்பதே மந்திரிக்கு அழகு)
  9. தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை.
    (அஞ்சாமையும், வீரமுமே தளபதிக்கு அழகு.)
  10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல். 
    (விருந்தினரோடு உண்பதே உணவிற்கு அழகு)
  11. பெண்டிர்க் கழகுஎதிர் பேசா திருத்தல்.  
    (எதிர்த்துப் பேசாமலிருப்பதே பெண்களுக்கு அழகு)
  12. குலமகட் லழகுதன் கொழுநனைப் பேணுதல்.  
    (கணவனைப் பார்த்துக் கொள்வதே குடும்பப் பெண்ணுக்கு அழகு)
  13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.  
    (உடலைப் பிறர் கவரும் வண்ணம் அலங்கரித்துக் கொள்வது விலைமாதர்க்கு அழகு)
  14. அறிஞற் கழகு கற்றுணர்ந் தடங்கல். 
    (அடக்கமாக இருப்பது தான் கல்வி பயின்று, ஆய்ந்தறிந்த அறிஞர்க்கு அழகு)
  15. வறிஞர்க் கழகு வறுமையில் செம்மை.
    (வறுமையில் வாடும்போதும் ஒழுக்கமாக இருப்பது வறியவர்களுக்கு அழகு)
  16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
    வானுற வோங்கி வளம்பெற வளரினும்
    ஒருவர் கிருக்க நிழலா காதே. 

    (சுவைமிக்க பெரும் பழத்தின் விதையில் வானுயர வளர்ந்தாலும், பனைமரம் ஒருவருக்கும் நிழல் தராது)
  17. தௌ்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
    தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன்சினையினும்
    நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
    அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
    மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

    (ஆலமரத்தின் சிறிய பழத்தின் விதை, தெளிந்த நீர்கொண்ட குளத்து மீனின் முட்டையை விட சிறியதே ஆயினும், பெருமை மிக்க யானை, அலங்கரித்த தேர், காலாட்படையோடு  மன்னர்க்கும்  நிழல் தரும்.)
  18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
    (உருவத்தில் பெரியவராக இருப்பவரெல்லாம் பெரியவர்கள் இல்லை.)
  19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.
    (உருவத்தில் சிறியவராக இருப்பவரெல்லாம் சிறியவர்கள் இல்லை.)
  20. பெற்றோ ரெல்லாம் பிள்ளை களல்லர்.
    (நாம் பெற்ற எல்லா பிள்ளைகளுமே பிள்ளை என்று சொல்ல தகுந்த நற்பெயர் எடுக்க மாடடார்கள்.)
  21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர். 
    (எல்லா உறவினரும் உண்மையில் உறவினர் என்று சொல்ல இயலாது)
  22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.
    (மணம்புரிந்து கொண்ட எல்லாரும் மனமொத்த மனைவிகள் அல்ல)
  23. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
    (சுண்டக் காய்ச்சினாலும், பசுவின் பால் சுவை குறையாது.)
  24. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது.  
    (நெருப்பிலிட்டு வாட்டினாலும் சுத்தமான பொன் ஒளி குறையாது)
  25. அரைக்கினும் சந்தணம் தன்மணம் அறாது.  
    (நன்றாக அரைத்தாலும் சந்தனத்தின் மணம் குறைவதில்லை)
  26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
    (எவ்வளவு புகைத்தாலும் கரிய அகில்கட்டை துர்மணம் வீசாது)
  27. கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது.  
    (எவ்வளவு கலக்கினாலும் குளிர்ந்த கடல் சேறு ஆகிவிடாது.)
  28. அடினும்பால் பெய்துகைப்பு
    அறாதுபேய்ச் சுரைக்காய். 

    (பாலுடன் கலந்து காய்ச்சினாலும், பேய்ச்சுரைக்காய் கசப்பு நீங்காது)
  29. ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது.  
    (பலவித வாசனைகளை சேர்த்தாலும், உள்ளிப்பூண்டு நறுமணம் வீசாது)
  30. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.
    (நம் நடத்தையால் தான் நமக்கு மேன்மையும், கீழ்மையும் வரும்)
  31. சிறியோர் செய்த சிறு பிழை யெல்லாம்
    பெரியோ ராயின் பெறுப்பது கடனே.

    (சிறியவர்கள் செய்யும் சிறு, சிறு பிழைகளையெல்லாம் பெரியவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்)
  32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்
    பெரியோரப் பிழை பொறுத்தலு மரிதே.  

    (சிறியோர் செய்யும் பிழைகள் பெரிதாக இருந்தால், பெரியோர்கள் அதை பொறுத்துக் கொள்ளல் அரிது)
  33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
    நீருக்குள் பாசிபோல் வேர்கொள்ளாதே.

    (நூறாண்டுகள் பழகியிருந்தாலும் முரடர்களின் நட்பு நிலைக்காது. அது நீரிலிருக்கும் பாசி போல் வேர் ஊன்றாது)
  34. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
    இருநிலம் பிழக்க வேர் வீழ்க் கும்மே.  

    (ஒருநாள் பழகியிருந்தாலும் பெரியோரின் நட்பு, நிலத்தைப் பிளந்து செல்லும் வேர் போல ஊன்றிடும்)
  35. கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சை புகினும் கற்கை நன்றே. 

    (பிச்சையெடுத்தாவது கல்வி கற்பதே நல்லது)
  36. கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்
    நெல்லினுள் பிறந்த பதராகும்மே. 

    (கல்வியறிவில்லாத ஒருவன் தன் குலப்பெருமை பேசுவது நெல்லுக்கு நடுவே தோன்றும் குப்பைச் செடி போன்றது)
  37. நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்
    கற்றில னாயின் கீழிருப் பவனே. 

    (உயர் குலத்தில் பிறந்தவன் ஆயினும் கல்வியின்றேல் அவன் தாழ்ந்தவனே)
  38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
    அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.

    (எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் கல்வியில் மேம்பட்டவராயின் அவரை  எங்கும் வரவேற்பார்கள்.)
  39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.  
    (அறிஞனை அரசனும் விரும்புவான் )
  40. அச்சம் உள் அடக்கி அறிவு அகத்தில்லாக்
    கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
    எச்சமற்று ஏமாந்து இருக்கை நன்றே.

    (பயந்தாங்கொள்ளியான, அறிவில்லாத, உபயோகமற்ற பிள்ளைகளைப் பெறுவதை விட ஒரு குடும்பம் சந்ததியே இல்லாமலிருப்பதே மேல் )
  41. யானைக்கு இல்லை தானமும் தருமமும்.
    (நீளமான கையிருந்தும் யானை தான, தர்மம் செய்வதில்லை. )
  42. பூனைக்கு இல்லை தவமும் தயையும்.
    (கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் பூனை தவமும், தயையும் கொள்வதில்லை )
  43. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும். 
    (ஞானிகளுக்கு  இன்ப, துன்பங்களில்லை )
  44. சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும். 
    (கறையான் செல்வர் என்றும் செருக்கர் என்றும் பேதம் பாராமல் எல்லாப் பொருளையும் அழித்துவிடும். )
  45. முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்.  
    (ஓட்டமோ, நிலைத்ததோ. முதலைக்கு எல்லா நீரும் ஒன்றுதான். எங்கும் அது மூர்க்கமாகவே இருக்கும்)
  46. அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை. 
    (கல்லார்க்கு எதைப் பற்றியும் பயமோ, வெட்கமோ இல்லை )
  47. நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.  
    (நாளும் கிழமையும் பிணியால் வாடுவோர்க்கு  கில்லை )
  48. கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.
    (கெட்டவர்களுக்கு நட்பும், சுற்றமும் இல்லை )
  49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. 
    (செல்வமும், வறுமையும் ஓரிடத்திலேயே இருக்காது )
  50. குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
    நடைமலிந் தோருர் நண்ணினும் நண்ணுவர்.  

    (யானைமீதமர்ந்து வெண்கொற்றக்குடையின் கீழ் சென்றோரும், பிழைப்புக்காக வேற்றூருக்கு தள்ளாடி நடந்தே செல்ல நேரிடும். )
  51. சிறப்புஞ் செல்வமும் பெருமையும் உடையோர்
    அறக்கூழ்சாலை அடையினும் அடைவர்.

    (சிறப்பும் செல்வமும் பெருமையும் உள்ளவர்களும் உணவிற்கு தர்ம சத்திரத்தை அடையும் காலம் வரலாம். )
  52. அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
    அரசரோடி ருந்தர சாளினும் ஆளுவர். 

    (வீட்டுக்கு வீடு சென்று  பிச்சையை கேட்டு வாங்கி உண்போரும் அரசராகும் காலம் வரலாம்)
  53. குன்றத் தனைய இருநிதி படைத்தோர்
    அன்றைப் பகலே அழியினும் அழிவர்.  

    (மலையளவு செல்வம் உள்ளவர்களும் ஒரே பகலில் வறியவர் ஆனாலும் ஆவர்.)
  54. எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக்
    கழுதை மேய்பாழா கினும் ஆகும்.

     (ஏழடுக்கு மாட மாளிகையும் அடியோடு சாய்ந்து கழுதை மேயும் பாழ் நிலமானாலும் ஆகும். )
  55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
    பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
    நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும்.  

    (காளை மாடும், கழுதையும் மேய்ந்து கொண்டிருந்த பாழ்நிலமும், பொன் வளையல்கள் அணிந்த மகளிரும், ஆண்களும் கூடி வாழும் நெற்குவியல் மிக்க பெரு நகரமானாலும் ஆகலாம். )
  56. மணஅணி அணிந்த மகளி ராங்கே
    பிணஅணி அணிந்துதம் கொழுநரைத் தழீஇ
    உடுத்த ஆடை கோடியாக

    முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.

    (கல்யாண ஆடை அணிந்த மகளிரும் அன்றே அதே ஆடை கோடி ஆடையாகி விதவைக் கோலம் பூண்டு, தன் கணவனைத் தழுவி முடிந்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர். )
  57. இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே.  
    (இல்லாதவர் பிச்சை கேட்பது இயற்கையே )
  58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே.
    (இல்லையென்று பிச்சையெடுப்பவர்க்கு பிச்சையிடுவது செல்வம் உடையவர்க்குக் கடமையே. )
  59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
    எல்லாம இல்லை இல் இல்லோர்க்கே.

    (பூமியும், வானும் அடைந்தாலும் மனையாள் இல்லாதவர் ஒன்றும் இல்லாதவரே)
  60. தறுகண் யானை தான்பெரி தாயினும்
    சிறுகண் மூங்கிற் கோற்கு அஞ்சுமே.

    (அச்சமில்லாத பெரிய யானையும், சிறு கணுக்களை உடைய மூங்கில் கோலுக்கு அஞ்சும்)
  61. குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
    புன்தலைப் புல்வாய் புலிக் கஞ்சும்மே. 

    (மலைகளோடு கூடிய பெருங்காட்டில் வாழ்ந்தாலும், சிறுதலை உடைய மானானது புலிக்கு அஞ்சும)
  62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும்
    தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. 

    (ஆரைப்பூண்டு மிகுந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் தேரைக்கு பாம்பென்றால் பயமே)
  63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
    கடும் புலி வாழும் காடு நன்றே. 

    (கொடுங்கோல் ஆட்சி செய்யும் நாட்டை விட, கடும் புலி வாழும் காடு நல்லது)
  64. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
    தேன்தேர் குறவர்த் தேயம் நன்றே.

    (சான்றோர் இல்லாத பழைய ஊரை விட, தேனைத் தேடித் திரியும் குறவர் நாடு நல்லது )
  65. காலையும் மாலையும் நான்மறை யோதா
    அந்தணர் என்போர் அனைவரும் பதரே. 

    (இருவேளையும் வேதம் ஓதாத வேதியர்  பதரே )
  66. குடியலைந்து இரந்துவெங் கோலொடு நின்ற
    முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே.

    (இறைவனுக்கு ஒப்பான அரசனும், குடிமக்களை வருத்தி அவர் பொருள் பறித்து கொடுங்கோலாட்சி செய்தால் அந்த மூர்க்கனும் பதரே)
  67. முதலுள பண்டம்கொண்டு வாணிபம்செய்து
    அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே. 

    ( மூலதனம் இருந்தும் அதனால் வாணிபம் செய்து உண்ணாத வணிகரும் பதரே )
  68. வித்தும் ஏரும் யுளவாய் இருப்ப
    எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. 

    (விதையும், ஏரும் தயாராக இருந்தும், அதனைக் கொண்டு உழவாத சலித்திருக்கும் உழவனும் பதரே)
  69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
    பின்பவள் பாராப் பேதையும் பதரே.  

    (தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்பின்பவள் பாராப் பேதையும் பதரே)
  70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
    பிறமனைக் கேகும் பேதையும் பதரே.  

    (மனைவியைத் தனியே வீட்டில் விட்டு விட்டு, அடுத்தவளைத் தேடும் மடையனும் பதரே)
  71. தன்னா யுதமும் தன்கைப் பொருளும்
    பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே.
      

    (தொழிலுக்கு வேண்டிய தன் கருவியையும், தன் செல்வத்தையும் அடுத்தவனிடம் கொடுக்கும் மடையனும் பதரே)
  72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
    சாற்றுவது ஒன்றைக் போற்றிக் கேண்மின்.  

    (வாயையே பறையாகவும், நாக்கை அடிக்கும் கோலாகவும் கொண்டு அறிவுரை கூறும் சான்றோர் கூற்றைப் போற்றி கேட்க வேண்டும்)
  73. பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால்
    மெய்போ லும்மே மெய்போ லும்மே.  

    (சொல் வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும்)
  74. மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
    பொய்போ லும்மே பொய்போ லும்மே. 

    (பேச்சுத் திறமையில்லாத ஒருவன் சொல்லும் மெய்யும் பொய் போலவே தோன்றும்)
  75. இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே
    இருவரும் பொருந்த உரையா ராயின்
    மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்
    மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்தாம்
    முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
    வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே. 

    (இருதரப்பினர் கூறுவதையும் பலமுறைக் கேட்டும், இருவரும் ஒப்ப நீதி கூறாவிடில், வழக்கில் தோல்வியுற்றவர் மனமாற அழும் கண்ணீர் நீதி உரைப்பவர் தலைமுறைகளையும் மும்மூர்த்திகளும் முறையாகக் காத்தாலும் அழித்துவிடும் )
  76. பழியா வருவது மொழியா தொழிவது. 
    (நமக்குப் பழிவரும் எந்த சொல்லையும் சொல்லாது விட்டொழிக்க வேண்டும்)
  77. சுழியா வருபுனல் இழியா தொழிவது.  
    (சுழலாக வரும் நீர் வெள்ளத்தில் இறங்கக் கூடாது)
  78. துணையோ டல்லது நெடுவழி போகேல்.  
    (தனியாகத் தொலைதூரப் பயணம் செய்யக் கூடாது.)
  79. புணை மீதல்லது நெடும்புன லேகேல். 
    (தெப்பத்தின் மேல் செல்லாமல், நீண்ட பெரும் நீரோட்டத்தில் நீந்தக் கூடாது.)
  80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
    இயலா தனகொடு முயல்வதா காதே. 
     

    (அழகான தனங்களையும், மை தீட்டிய கண்களையும் கொண்ட மாதர் தந்திரங்களில் மயங்கித் தகாத கொடுங்கார்யங்களில் இறங்கக் கூடாது)
  81. வழியே ஏகுக வழியே மீளுக.  
    (நல்ல நேர்மையான வழியிலேயே சென்று, வர வேண்டும்)
  82. இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.  
    (இவையே உலகில் நடந்து கொள்ளும் முறை)

வாழிய நலனே வாழிய நலனே.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்