மகா சிவராத்திரி


Maha Sivaraathri

மகா சிவராத்திரி

சிவபெருமானை விசேடமாக வழிபடுவதற்குரிய விரதங்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். இராத்திரி என்பது இருட்காலம். எனினும் உண்மையான இருட்காலம், இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி நிற்கும் காலம். இதனை "சர்வசங்கார காலம்", "பிரளய காலம்", "ஊழி முடிவு" என்று பலவாறாகக் கூறுவர். இந்த ஊழி ஒடுக்கக் காலத்தில் பஞ்ச பூதங்களும் தநு, கரண, புவன போகங்களும் ஒன்றுமேயில்லாது உயிர்கள் செயலற்றுக் கிடப்பனவாகும். ஆகவே அப்போது அமைதியே நிலவும். இந்தப் பேரிருளில் தனித்து நிற்பவன் சிவபெருமான் ஒருவனேயாம். நாம் நாள்தோறும் காண்கின்ற இரவு அனைத்து உயிர்களுக்கும் உரிய சாதாரண இராக்காலம். ஆயின் உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரிய சாதாரண இராக்காலமாகும். இதனாற்றான் இவ்விரவு "சிவராத்திரி" எனப்பெயர் பெற்றுள்ளது.
சிவராத்திரி ஐந்து வகைப்படும் மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, நித்திய சிவராத்திரி என்பனவாக்கும். மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசியில் நோற்கப்படுவதே மஹா சிவராத்திரி ஆகும். ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவித்தற்காக இறைவன் சோதி வடிவான இலிங்கமாய் நின்று "இலளிதாதேவி" என்னும் பெயரோடு சக்தியைத் தோற்றுவிக்க, அத்தேவி இலிங்கபிரானை வணங்க, அவர் இலிங்கோற்பவராகத் தோன்றி உலகின் மறு தோற்றத்தின் பொருட்டுப் பிரம்மா முதலியோரைப் படைத்துச் சிருட்டித் தொழிலை ஆரம்பிப்பார். இதனையே மாசி மாதத்துச் சதுர்தசித் திதியில் வரும் இரவும், அன்று இரவு மூன்றாம் சாமம் நடைபெறும் இலிங்கோற்பவ பூசையும் எடுத்துக் காட்டுகின்றன.


சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

சைவசமயிகள் அனைவரும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் சிவராத்திரி விரதமாகும். இந்நாளில் உபவாசம் இருப்பதோடு இரவு முழுவதையும் நித்திரையின்றி சிவபூசையிலும், சிவ வழிபாட்டிலும் செலவு செய்தல் வேண்டும். இரவில் நான்கு சாமப் பூசைகளும் அவ்வக்காலங்களில் செய்தல் உத்தமம். இன்றேல் ஒருகாலத்தில் சேரத்தேனும் செய்தல் வேண்டும்.இது மத்திமம் ஆகும். நான்கு சாமமும் பூசை செய்வோர் முதற் சாமத்திற் பாலாலும், இரண்டாம் சாமத்திற் தயிராலும், மூன்றாம் சாமத்தில் நெய்யாலும், நான்காம் சாமத்தில் தேனாலும் பெருமானுக்கு அபிடேகம் செய்யவண்டும். நான்கு சாமப் பூசைகளிலும் வில்வத்தால் அர்ச்சிப்பது மேலான பலனைக் கொடுக்கும். இக்காலங்களில் விநாயகருக்கும், சண்டேசுவரருக்கும் பூசை செய்தல் வேண்டும்.


சிவபூசை இல்லாதோர் நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்வதோடு, பஞ்சாட்சர செபம், சிபுராணம் படித்தல், கேட்டல் முதலியவற்றில் இரவைக் கழித்தல் வேண்டும். உபவாசம் இருக்க இயலாதோர் நீரேனும், பாலேனும் உண்டு கொள்ளலாம். இரவு முழுவதும் இந்நாளில் நித்திரை விழிக்க முடியாதவர்கள் பதினாலாவது நாழிகையிலே வரும் இலிங்கோற்ப காலம் வரையிலாயினும் நித்திரை ஒழித்தல் வேண்டும். இவ் இலிங்கோற்பவகாலத்தில் செய்யும் தரிசனமும் பூசையும் பெரும் பலன் நிறைந்தன. இறைவன் திருவுளம் பற்றிய காலம் இதுவாகும்.


உபவாசம் மேற்கொண்டோர் அடுத்தநாட்காலையிலே நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு சூரியோதயத்தின் முன் ஆறு நாழிகைக்குள்ளே சிவனடியாரோடு பாரணம்பண்ணல் (உபவாசத்திற்குப் பின் உட்கொள்ளும் உணவு) வேண்டும். பாரணம் பண்ணிய பின் பகலிலே நித்திரை செய்யக்கூடாது.


சாமம்பழம்தூபம்மலர்
1ம்வில்வம்சாம்பிராணிதாமரை, அலரி
2ம்பலாசந்தனக்கட்டைசண்பகம், தாமரை
3ம்மாதுளம்குங்கிலியம்செங்கழுநீர், அத்தி, பிச்சி
4ம்நானாவித பழங்கள்கர்ப்பூரம்நந்தியாவர்த்தம்

சிவராத்திரி பற்றிய புராணக் கதை

ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரமனும். காத்தற் கடவுளான விஷ்ணுவும் ஆணவத்தோடு தம்முள் யார் பெரியவர் என முரண்பட்டனர். அப்போது சிவபெருமான் பேரொளிப் பிழம்பாகக் காட்சியளித்து "இந்த ஒளிப்பிழம்பின் அடியையாவது முடியையாவது கண்டுவருபவரே பெரியவர்." என்று அசரீரி ஆகக் கூறினார்.

பிரமா அன்னப்பட்சி வடிவிற் பறந்து சென்று ஒளிப்பிழம்பின் முடியைக் காண முயன்றார். விஷ்ணு பன்றி வடிவில் மண்ணைக் குடைந்து சென்று அதன் அடியைக் காண முயன்றார். ஆனால் இருவரும் அவர்களது முயற்சியில் தோல்வியுற்றனர். தமது இயலாமையையும் சிவபெருமானே பரம்பொருள் என்பதையும் உணர்ந்தனர். இக்கதை மூலம் ஆணவம் கொண்டவர்களால் இறைவனை அறிய முடியாது என்ற பேருண்மை வெளிப்படுகின்றது. இச் சம்பவம் நிகழ்ந்த தினமே "மஹா சிவராத்திரி" விரத நாளாகும். சிவபெருமான் இலிங்கோற்பவ மூர்த்தியாக வெளிப்பட்ட அர்த்தசாமமே இலிங்கோற்பவ காலமாகும்(இரவு 11.30 முதல் 12.15 வரை).


சிவராத்திரி விரதம் நோற்பதன் பலன்கள்

  • பாவநீக்கம்
  • உலகம் நலம் பெற்றுச் செழித்தல்

சிவபுராணத்தை PDF வடிவத்தில் பெற இங்கே கிளிக் செய்யவும்.