ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு


ஆலய வழிபாடு

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" ஒளவைப்பாட்டியின் கூற்று. இறைவனை அடைவதற்குப் பல்வேறு வழிகள் உண்டு. அவற்றில் ஆலய வழிபாடும் ஒன்று. ஆலயம் என்பது ஆன்மாக்கள் ஒடுங்குவதற்கு ஏற்ற இடமாகும். ஆலயத்திற்கு கோவில் என்று இன்னொரு பெயரும் உண்டு. கோவில் என்றால் "இறைவன் உறையும் இடம்" எனப் பொருள் படும். எனவே ஆலயம் என்பது புனிதமான இடமாகும். ஞானிகள் தமக்குள் இறைவனைக் காண்பர் சாதாரண மக்களாகிய எமக்கு மனக்கண் முன் இறைவனைக் காணும் திறன் இல்லை அதனால் எமக்கு ஆலய வழிபாடு இன்றியமையாதது. எனவே அங்கு செல்வோர் உடலையும் உள்ளத்தையும் தூமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆலயத்திற்குச் செல்லும் நாம் நீராடி, தூய ஆடைகளை அணிந்து, சிவசின்னங்களைத் தரித்து, "நமசிவாய" என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு செல்லவேண்டும். எம்மால் ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்குச் செல்ல முடியுமானால் நன்று அப்படி முடியாவிட்டால் வாரத்தில் ஒருநாளாவது செல்வது அவசியம். இதனை விட விரத நாட்களான பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகைத் தீபம், விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, சிவராத்திரி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்ற விரத நாட்களிலும் பண்டிகைக் காலங்களான சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, தீபாவளி, தைபொங்கல் ஆகிய நாட்களில் நாம் குடும்பத்தோடு ஆலயத்திற்குச் சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும்.

நாம் ஆலயத்திற்குச் செல்லும் போது வெறும் கையோடு செல்லக்கூடாது. பூசைப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, பூ போன்றவற்றையோ அபிடேகப் பொருட்களான பால், தயிர், இளநீர் போன்றவற்றை பூசைத்தட்டில் வைத்து அதை இடுப்புக்கு மேல் தாங்கிய வண்ணம் மெய்யன்போடு சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு செல்ல வேண்டும்.

வழிபடும் முறை

முதலில் கோபுரத்தைக்(தூலலிங்கம்) கண்டவுடன் இரு கைகளையும் கூப்பி, திரியாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பின்னர் கால்களைக் கழுவி, துவார பாலகரை வணங்கி கோவிலுக்குள் சென்று பலி பீடத்திற்கு இப்பால் ஆண்கள் அட்டாங்க நமஸ்காரத்தையும்(தலை, மேல்வாய், தோளிரண்டு, கையிரண்டு, காலிரண்டு ஆகிய எட்டு அவயங்கள் நிலத்தில் படும்படி) , பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரத்தையும் (தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு ஆகிய ஐந்து உறுப்புக்கள் நிலத்திற் படும்படி) செய்யவண்டும். பின்னர் விநாயகரை வழிபட்டு மூலமூர்த்தியைத் தரிசிக்க வேண்டும். அதன்பின் உள்வீதியில் உள்ள பரிவார தெய்வங்களை வழிபட்டு இறுதியில் மும்முறை கைகொட்டி சண்டேஸ்வரரை வழிபட்டு சிவதரிசன பலனைத் தரும்படி வேண்டவேண்டும். ஆலய வீதியில் வலம் வரும் போது சிவசிந்தனையுடன் இரு கைகளையும் கூப்பி, வணங்கிக்கொண்டு மூன்று முறையேனும் ஐந்து முறையேனும் அல்லது ஏழு முறையேனும் மெதுவாக வலம் வருதல் வேண்டும். வலம் வரும்போது விக்கிரங்களைத் தொட்டு வணங்குதல் கூடாது.

தொண்டுகள்

ஆலயத்திலே நாம் கூட்டுதல், கழுவுதல், பூசை உபகரணங்களை விளக்குதல், பூந்தோட்டம் அமைத்தல், பூமாலை கட்டுதல், மணியடித்தல், விழாக்காலங்களில் வாகனம் காவுதல், குடை கொடி ஆலவட்டம் பிடித்தல், சாமரை வீசுதல், தீவர்த்தி பிடித்தல் போன்ற சரியைத் தொண்டுகளையும் திருமுறைகளைப் பாடுதல், மந்திரங்களை உச்சரித்தல் போன்ற கிரியைத் தொண்டுகளையும் செய்தல் வேண்டும். இச் செயல்கள் எமது பாவத்தைப் போக்கி புண்ணியத்தைத் தரும்.

ஆலய வழிபாடும், ஆலயத்தொண்டும் எமக்கு மன நிறைவைத்தரும், அன்பை வளர்க்கும், வாழ்வை மேம்படுத்தும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்