திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம்
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாய்ப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோதம் நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே! சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே!
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
வளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத்து விகமெ யாக
இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
திருமுறைப் பாடல்கள்
அன்புறும் சிந்தையர் ஆகி அடியவர்
நன்புறும் நல்லூர் பெருமணம் மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி ஏற்றுவார்
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கரியோய் நீ
வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டி அல்லாய்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்கனே பெரிய நீ சிறிய
என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்காணா நாற்பெருந் தடந்தோல்
கன்னலே தேனே அமுதமே
கங்கை கொண்ட சோளேச் சரத்தானே
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரை நாள்
நாரா யனனோடு நான் முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் குறிப்புக்கள்