சந்தான குரவர்
அன்பு வழியில் நின்று, பக்திபனுவல்கள் பாடி சைவத்தைப் வளப்படுத்திய பெரியவர்கள் நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆவர். அவர்கள் சமயகுரவர்கள் என்று அழைக்கப்படுவர்.
அறிவு வழியாலும் இறைவனை அடையலாம் என்பதைக்காட்டி, சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்கம் செய்த பெரியோர்கள் நால்வர். சந்தானம் என்றால் பரம்பரை என்றும் பொருள்படும். குரவர் என்றால் ஞானாசிரியர் என்றும் பொருள்படும். எனவே சந்தானகுரவர் என்றால் தத்துவஞான பரம்பரையில் வந்த ஞானாசிரியர்கள் என்று பொருள்படும்.
இவர்கள் அகச்சந்தானகுரவர், புறச்சந்தான குரவர் என இரு வகையாகச் சுட்டப்பெறுகின்றனர்.
பரம்பொருளாகிய ஸ்ரீ கண்ட பரமேஸ்வரனிடம் ஞான உபதேசம் பெற்ற திருநந்திதேவரும் அவரது பரம்பரையில் வந்த சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் அகச்சந்தானகுரவர் எனப்படுகின்றனர்.
பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்ற மெய்கண்ட தேவரும் அவரது மாணவபரம்பரையில் வந்த அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தான குரவர் எனப்படுவர்.
மெய்கண்டதேவர்
திருமுனைப்பாடி நாடு.
தந்தை: அச்சுதக்களப்பாளர்
தாய்: மங்களாம்பிகை
காலம்: கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டு
இவர் திருவெண்காட்டு இறைவனது அருளினால் பிறந்ததினால் இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுவேதவனப் பெருமாள். இவர் மூன்று வயதில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வான் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பரஞ் சோதி முனிவர் குழந்தையின் பரிபக்குவத்தை உணர்ந்து, குழந்தைக்கு மெய்ஞ்ஞான உபதேசம் வழங்கினார். அதனால் "மெய்கண்டார்" எனும் தீட்சாநாமத்தைப் பெற்றார்.
மெய்கண்டார் தனது காலத்துக்கு முற்படத் தோன்றிய சைவத்திருமுறைகளிற் காணப்பட்ட தத்துவக் கருத்துக்களை சைவசித்தாந்த கோட்பாடாக வழங்கினார்.
இவர் எழுதிய சைவசித்தாந்த நூல்களுள் புகழ்பெற்றது "சிவஞான போதம்" ஆகும். இந்நூல் சித்தாந்த சாத்திர முதல் நூல். இது பன்னிரண்டு சூத்திரங்களால் ஆனது.
மெய்கண்டரிடம் நாற்பத்தொன்பது மாணவர்கள் கற்றனர். அவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் சிறந்தவர். மற்றொரு மாணவர் மனவாசகம் கடந்தார், "உண்மை விளக்கம்" எனும் சித்தாந்த நூலை இயற்றினார்.
மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் இறையடி சேர்ந்தார்.
அருணந்தி சிவாச்சாரியார்
நாடு : திருப்பெருந்துறை
காலம்: கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டு
ஆகமநூல் அறிவு நிரம்பப்பெற்றதால் "சகலாகம பண்டிதர்" எனும் சிறப்புப்பெயர் பெற்றார்.
மெய்கண்ட தேவரின் தந்தையின் ஆசிரியர் அருணந்தி சிவாச்சாரியார் ஒருநாள் அவரது மாணவரான அச்சுத்தக்களப்பனாரின் மகனான மெய்கண்டார் பலருக்கு பாடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டார். குழந்தைதானே எனும் அலச்சியத்தோடு "ஆணவத்தின் சொரூபத்தை விளக்க முடியுமா?" எனக் கேட்டார். மெய்கண்டார் எதுவும் பேசாது தனது பிஞ்சு விரலினால் அருணந்தி சிவாச்சாரியாரையே சுட்டிக் காட்டினார். அப்போது மெய்ஞ்ஞான விழிப்புப் பெற்றார். குழந்தை என்றும் கருதாது மெய்கண்டாரைக் குருவாகக் கொண்டார்.
மெய்கண்டாரின் முதன்மை மாணவரான இவர், சிவஞான போதத்தின் வழிநூலாக "சிவஞான சித்தியார்" எனும் பெரும் நூலை எழுதி அருளினார். இந்த நூலின் பெருமையை "சிவனுக்கு மேல் தெய்வம் இல்லை; சித்திக்கு விஞ்சிய நூல் இல்லை". எனும் ஆன்றோர் வாக்கின் மூலம் அறிய முடிகின்றது. சிவஞான சித்தியார் எனும் பெரும் நூல் இரு பகுதிகளைக் கொண்டது. அது பரபக்கம், சுபக்கம் ஆகும். சுபக்கம் சைவசித்தாந்த அடிப்படைகளை விளக்குகின்றது. பரபக்கம் பிறசமய தத்துவங்களின் பொருந்தாமையைக் கண்டிக்கும் பகுதி ஆகும்.
இவர் அருளிய மற்றொரு நூல் "இருபா இருபஃது" எனும் தத்துவ நூல். இந் நூல் பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாக உள்ளது. சைவசித்தாந்த கருத்துக்களை மாணவரின் வினா ஆசிரியாின் விடை என்ற அமைப்பில் விளக்கி உள்ளது.
புரட்டாதி மாத பூர நட்சத்திரத்தில் இறைவன் அடி அடைந்தார்.