காரிய சித்தி மாலை

காரிய சித்தி மாலை

காரிய சித்தி மாலை

விநாயகருக்குப் பல பெயர்கள் உண்டு பிள்ளையார், கணபதி, ஐங்கரன், ஆனைமுகன், விக்னேஸ்வரன் என்பன அவற்றுட் சிலவாகும். முதல் வணக்கத்துக்கு உரியவர் விநாயகர் ஆவார். எக்காரியங்களையும் தொடங்கும் முன் நாம் விநாயகரை வணங்கி விட்டே தொடங்க வேண்டும், அப்போது தான் அக்காரியங்கள் தடங்கள் இன்றி இனிதே நிறைவுறும். காரியங்கள் இனிதே நிறைவேற படிக்க வேண்டிய காரிய சித்தி மாலை கீழே தரப்பட்டுள்ளது. இப் பாடல்களைத் தினமும் பாடி நன்மை பெறுவோம்.


பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலகம் முழுவதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும்பொருள் எவன் அவ்
உலகிற்பிறங்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
கரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம்அடைகின்றோம்

மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.

இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும் எண்
தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும்
எனச் செப்பி மறைந்தார்.

காரிய முனிவர்


Linkaashdakam tamil



லிங்காஷ்டகம்

  1. ப்ரஹ்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
    சிறிதும் களங்கமிலா சிவலிங்கம்
    பிறவியின் துயரை நீக்கிடும் லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்

  2. அமரரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
    காமனை எரித்த கருணா லிங்கம்
    இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்

  3. வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
    வகையறிவாகிய காரண லிங்கம்
    சித்தரும் அனைவரும் போற்றிடும் லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்

  4. பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
    தன்னிடை நாகம் சூடிய லிங்கம்
    தக்கனின் யாகம் அழித்திடும் லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்

  5. குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
    பங்கய மாலையை சூடிய லிங்கம்
    பொங்கிய வினைகளை நீக்கிடும் லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்

  6. தேவர்கள் அர்ச்சனை செய்திடும் லிங்கம்
    தேடிடும் பக்தியில் சேர்த்திடும் லிங்கம்
    சூரியன் கோடி அடங்கிய லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்

  7. எட்டுத் தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
    எல்லாமாகிய காரண லிங்கம்
    எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்

  8. தேவரின் உருவில் பூசைகொள் லிங்கம்
    தேவர்கள் பூமியில் பூசைகொள் லிங்கம்
    பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
    பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்


சந்தான குரவர்

சந்தான குரவர்

  • அன்பு வழியில் நின்று, பக்திபனுவல்கள் பாடி சைவத்தைப் வளப்படுத்திய பெரியவர்கள் நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆவர். அவர்கள் சமயகுரவர்கள் என்று அழைக்கப்படுவர்.

  • அறிவு வழியாலும் இறைவனை அடையலாம் என்பதைக்காட்டி, சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்கம் செய்த பெரியோர்கள் நால்வர். சந்தானம் என்றால் பரம்பரை என்றும் பொருள்படும். குரவர் என்றால் ஞானாசிரியர் என்றும் பொருள்படும். எனவே சந்தானகுரவர் என்றால் தத்துவஞான பரம்பரையில் வந்த ஞானாசிரியர்கள் என்று பொருள்படும்.

  • இவர்கள் அகச்சந்தானகுரவர், புறச்சந்தான குரவர் என இரு வகையாகச் சுட்டப்பெறுகின்றனர்.

  • பரம்பொருளாகிய ஸ்ரீ கண்ட பரமேஸ்வரனிடம் ஞான உபதேசம் பெற்ற திருநந்திதேவரும் அவரது பரம்பரையில் வந்த சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் அகச்சந்தானகுரவர் எனப்படுகின்றனர்.

  • பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்ற மெய்கண்ட தேவரும் அவரது மாணவபரம்பரையில் வந்த அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தான குரவர் எனப்படுவர்.


மெய்கண்டதேவர்

  • திருமுனைப்பாடி நாடு.

  • தந்தை: அச்சுதக்களப்பாளர்

  • தாய்: மங்களாம்பிகை

  • காலம்: கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டு

  • இவர் திருவெண்காட்டு இறைவனது அருளினால் பிறந்ததினால் இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுவேதவனப் பெருமாள். இவர் மூன்று வயதில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வான் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பரஞ் சோதி முனிவர் குழந்தையின் பரிபக்குவத்தை உணர்ந்து, குழந்தைக்கு மெய்ஞ்ஞான உபதேசம் வழங்கினார். அதனால் "மெய்கண்டார்" எனும் தீட்சாநாமத்தைப் பெற்றார்.

  • மெய்கண்டார் தனது காலத்துக்கு முற்படத் தோன்றிய சைவத்திருமுறைகளிற் காணப்பட்ட தத்துவக் கருத்துக்களை சைவசித்தாந்த கோட்பாடாக வழங்கினார்.

  • இவர் எழுதிய சைவசித்தாந்த நூல்களுள் புகழ்பெற்றது "சிவஞான போதம்" ஆகும். இந்நூல் சித்தாந்த சாத்திர முதல் நூல். இது பன்னிரண்டு சூத்திரங்களால் ஆனது.

  • மெய்கண்டரிடம் நாற்பத்தொன்பது மாணவர்கள் கற்றனர். அவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் சிறந்தவர். மற்றொரு மாணவர் மனவாசகம் கடந்தார், "உண்மை விளக்கம்"  எனும் சித்தாந்த நூலை இயற்றினார்.

  • மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் இறையடி சேர்ந்தார்.

அருணந்தி சிவாச்சாரியார்

  • நாடு : திருப்பெருந்துறை

  • காலம்: கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டு

  • ஆகமநூல் அறிவு நிரம்பப்பெற்றதால் "சகலாகம பண்டிதர்" எனும் சிறப்புப்பெயர் பெற்றார்.

  • மெய்கண்ட தேவரின் தந்தையின் ஆசிரியர் அருணந்தி சிவாச்சாரியார் ஒருநாள் அவரது மாணவரான அச்சுத்தக்களப்பனாரின் மகனான மெய்கண்டார் பலருக்கு பாடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டார். குழந்தைதானே எனும் அலச்சியத்தோடு "ஆணவத்தின் சொரூபத்தை விளக்க முடியுமா?" எனக் கேட்டார். மெய்கண்டார் எதுவும் பேசாது தனது பிஞ்சு விரலினால் அருணந்தி சிவாச்சாரியாரையே சுட்டிக் காட்டினார். அப்போது மெய்ஞ்ஞான விழிப்புப் பெற்றார். குழந்தை என்றும் கருதாது மெய்கண்டாரைக் குருவாகக் கொண்டார்.

  • மெய்கண்டாரின் முதன்மை மாணவரான இவர், சிவஞான போதத்தின் வழிநூலாக "சிவஞான சித்தியார்" எனும் பெரும் நூலை எழுதி அருளினார். இந்த நூலின் பெருமையை "சிவனுக்கு மேல் தெய்வம் இல்லை; சித்திக்கு விஞ்சிய நூல் இல்லை". எனும் ஆன்றோர் வாக்கின் மூலம் அறிய முடிகின்றது. சிவஞான சித்தியார் எனும் பெரும் நூல் இரு பகுதிகளைக் கொண்டது. அது பரபக்கம், சுபக்கம் ஆகும். சுபக்கம் சைவசித்தாந்த அடிப்படைகளை விளக்குகின்றது. பரபக்கம் பிறசமய தத்துவங்களின் பொருந்தாமையைக் கண்டிக்கும் பகுதி ஆகும்.

  • இவர் அருளிய மற்றொரு நூல் "இருபா இருபஃது" எனும் தத்துவ நூல். இந் நூல் பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாக உள்ளது. சைவசித்தாந்த கருத்துக்களை மாணவரின் வினா ஆசிரியாின் விடை என்ற அமைப்பில் விளக்கி உள்ளது.

  • புரட்டாதி மாத பூர நட்சத்திரத்தில் இறைவன் அடி அடைந்தார்.

திருமுறைப் பாடல்கள்


திருமுறைப் பாடல்கள்

திருச்சிற்றம்பலம்

அன்புறும் சிந்தையர் ஆகி அடியவர்
நன்புறும் நல்லூர் பெருமணம் மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி ஏற்றுவார் 
துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே  
                            
வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுவதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கரியோய் நீ
வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் 
யானும் அதுவே வேண்டி அல்லாய் 
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட 
அங்கனே பெரிய நீ சிறிய 
என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த 
எளிமையை என்றும் நான் மறக்கேன் 
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா 
முக்காணா நாற்பெருந் தடந்தோல்
கன்னலே தேனே அமுதமே 
கங்கை கொண்ட சோளேச் சரத்தானே 

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் 
அணியுடை ஆதிரை நாள் 
நாரா யனனோடு நான் முகன் அங்கி 
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் 
திசையனைத்தும் நிறைந்து 
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் 
பல்லாண்டு கூறுதுமே 

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

திருச்சிற்றம்பலம்

பூசைக்குரிய பூக்கள்


பூசைக்குரிய பூக்கள்

Poosaikuriya Pookkal

விநாயகர்அறுகு, சண்பகம், பாதிரி,
சூரியகாந்தி, வன்னி
சிவன்கொன்றை, வில்வம், தும்பை,
சங்குப்பூ, செம்பருத்தி
விஷ்ணுதுளசி, மாதவி, குருந்து,
வாகை, மத்யானி, கருங்கால்,
கொன்றை, முருக்கு, அலரி, செம்பரத்தை,
செந்திலகம், மருக்கொழுந்து
பிரமன் அலரி
முருகன் வெட்சி, கடம்பு, முல்லை, குறுஞ்சி,
மல்லிகை, காந்தள்
சூரியன் தாமரை
உமையம்பாள் நீலோத்பலம், தாமரை, சூரியகாந்தி,
செம்பவளமல்லி, நந்தியாவர்த்தை
இலட்குமி நெய்தல், செந்தாமரை
சரஸ்வதி வெண்தாமரை
வரலட்சுமி ஐந்துமடல் கொண்ட தாழம்பூ
துர்க்கை செவ்வெருக்கு, சிவப்பு அரலி,
கொன்றைமலர்
அக்னி வன்னி


நவகிரக பூசைக்குரிய பூக்கள்

சூரியன்செந்தாமரை
சந்திரன்வெள்ளரவி
செவ்வாய்செண்பகம்
புதன்வெண்காந்தள்
வியாழன்முல்லை
வெள்ளிவெண்தாமரை
சனிகருங்குவளை
ராகுமந்தாரை
கேதுசெவ்வல்லி


கடவுளுக்கு ஆகாத பூக்கள்

விநாயகர்துளசி
சிவன்தாழம்பூ
விஷ்ணுஎருக்கம்பூ, ஊமத்தம்பூ
வைரவர்நந்தியாவர்த்தம், மல்லிகை
சூரியன்வில்வம்
உமைநெல்லி
துர்க்கைஅறுகு
இலட்சுமிதும்பைப்பூ
சரஸ்வதிபவளம்


மகா சிவராத்திரி


Maha Sivaraathri

மகா சிவராத்திரி

சிவபெருமானை விசேடமாக வழிபடுவதற்குரிய விரதங்களில் சிவராத்திரியும் ஒன்றாகும். இராத்திரி என்பது இருட்காலம். எனினும் உண்மையான இருட்காலம், இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி நிற்கும் காலம். இதனை "சர்வசங்கார காலம்", "பிரளய காலம்", "ஊழி முடிவு" என்று பலவாறாகக் கூறுவர். இந்த ஊழி ஒடுக்கக் காலத்தில் பஞ்ச பூதங்களும் தநு, கரண, புவன போகங்களும் ஒன்றுமேயில்லாது உயிர்கள் செயலற்றுக் கிடப்பனவாகும். ஆகவே அப்போது அமைதியே நிலவும். இந்தப் பேரிருளில் தனித்து நிற்பவன் சிவபெருமான் ஒருவனேயாம். நாம் நாள்தோறும் காண்கின்ற இரவு அனைத்து உயிர்களுக்கும் உரிய சாதாரண இராக்காலம். ஆயின் உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரிய சாதாரண இராக்காலமாகும். இதனாற்றான் இவ்விரவு "சிவராத்திரி" எனப்பெயர் பெற்றுள்ளது.
சிவராத்திரி ஐந்து வகைப்படும் மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, நித்திய சிவராத்திரி என்பனவாக்கும். மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசியில் நோற்கப்படுவதே மஹா சிவராத்திரி ஆகும். ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவித்தற்காக இறைவன் சோதி வடிவான இலிங்கமாய் நின்று "இலளிதாதேவி" என்னும் பெயரோடு சக்தியைத் தோற்றுவிக்க, அத்தேவி இலிங்கபிரானை வணங்க, அவர் இலிங்கோற்பவராகத் தோன்றி உலகின் மறு தோற்றத்தின் பொருட்டுப் பிரம்மா முதலியோரைப் படைத்துச் சிருட்டித் தொழிலை ஆரம்பிப்பார். இதனையே மாசி மாதத்துச் சதுர்தசித் திதியில் வரும் இரவும், அன்று இரவு மூன்றாம் சாமம் நடைபெறும் இலிங்கோற்பவ பூசையும் எடுத்துக் காட்டுகின்றன.


சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

சைவசமயிகள் அனைவரும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் சிவராத்திரி விரதமாகும். இந்நாளில் உபவாசம் இருப்பதோடு இரவு முழுவதையும் நித்திரையின்றி சிவபூசையிலும், சிவ வழிபாட்டிலும் செலவு செய்தல் வேண்டும். இரவில் நான்கு சாமப் பூசைகளும் அவ்வக்காலங்களில் செய்தல் உத்தமம். இன்றேல் ஒருகாலத்தில் சேரத்தேனும் செய்தல் வேண்டும்.இது மத்திமம் ஆகும். நான்கு சாமமும் பூசை செய்வோர் முதற் சாமத்திற் பாலாலும், இரண்டாம் சாமத்திற் தயிராலும், மூன்றாம் சாமத்தில் நெய்யாலும், நான்காம் சாமத்தில் தேனாலும் பெருமானுக்கு அபிடேகம் செய்யவண்டும். நான்கு சாமப் பூசைகளிலும் வில்வத்தால் அர்ச்சிப்பது மேலான பலனைக் கொடுக்கும். இக்காலங்களில் விநாயகருக்கும், சண்டேசுவரருக்கும் பூசை செய்தல் வேண்டும்.


சிவபூசை இல்லாதோர் நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்வதோடு, பஞ்சாட்சர செபம், சிபுராணம் படித்தல், கேட்டல் முதலியவற்றில் இரவைக் கழித்தல் வேண்டும். உபவாசம் இருக்க இயலாதோர் நீரேனும், பாலேனும் உண்டு கொள்ளலாம். இரவு முழுவதும் இந்நாளில் நித்திரை விழிக்க முடியாதவர்கள் பதினாலாவது நாழிகையிலே வரும் இலிங்கோற்ப காலம் வரையிலாயினும் நித்திரை ஒழித்தல் வேண்டும். இவ் இலிங்கோற்பவகாலத்தில் செய்யும் தரிசனமும் பூசையும் பெரும் பலன் நிறைந்தன. இறைவன் திருவுளம் பற்றிய காலம் இதுவாகும்.


உபவாசம் மேற்கொண்டோர் அடுத்தநாட்காலையிலே நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு சூரியோதயத்தின் முன் ஆறு நாழிகைக்குள்ளே சிவனடியாரோடு பாரணம்பண்ணல் (உபவாசத்திற்குப் பின் உட்கொள்ளும் உணவு) வேண்டும். பாரணம் பண்ணிய பின் பகலிலே நித்திரை செய்யக்கூடாது.


சாமம்பழம்தூபம்மலர்
1ம்வில்வம்சாம்பிராணிதாமரை, அலரி
2ம்பலாசந்தனக்கட்டைசண்பகம், தாமரை
3ம்மாதுளம்குங்கிலியம்செங்கழுநீர், அத்தி, பிச்சி
4ம்நானாவித பழங்கள்கர்ப்பூரம்நந்தியாவர்த்தம்

சிவராத்திரி பற்றிய புராணக் கதை

ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரமனும். காத்தற் கடவுளான விஷ்ணுவும் ஆணவத்தோடு தம்முள் யார் பெரியவர் என முரண்பட்டனர். அப்போது சிவபெருமான் பேரொளிப் பிழம்பாகக் காட்சியளித்து "இந்த ஒளிப்பிழம்பின் அடியையாவது முடியையாவது கண்டுவருபவரே பெரியவர்." என்று அசரீரி ஆகக் கூறினார்.

பிரமா அன்னப்பட்சி வடிவிற் பறந்து சென்று ஒளிப்பிழம்பின் முடியைக் காண முயன்றார். விஷ்ணு பன்றி வடிவில் மண்ணைக் குடைந்து சென்று அதன் அடியைக் காண முயன்றார். ஆனால் இருவரும் அவர்களது முயற்சியில் தோல்வியுற்றனர். தமது இயலாமையையும் சிவபெருமானே பரம்பொருள் என்பதையும் உணர்ந்தனர். இக்கதை மூலம் ஆணவம் கொண்டவர்களால் இறைவனை அறிய முடியாது என்ற பேருண்மை வெளிப்படுகின்றது. இச் சம்பவம் நிகழ்ந்த தினமே "மஹா சிவராத்திரி" விரத நாளாகும். சிவபெருமான் இலிங்கோற்பவ மூர்த்தியாக வெளிப்பட்ட அர்த்தசாமமே இலிங்கோற்பவ காலமாகும்(இரவு 11.30 முதல் 12.15 வரை).


சிவராத்திரி விரதம் நோற்பதன் பலன்கள்

  • பாவநீக்கம்
  • உலகம் நலம் பெற்றுச் செழித்தல்

சிவபுராணத்தை PDF வடிவத்தில் பெற இங்கே கிளிக் செய்யவும்.





விநாயகர் துதிப் பாடல்கள்

விநாயகர் வணக்கப் பாடல்கள்

விநாயகர் வணக்கம்


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆணை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவ மாய்நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.





அபிராமியம்மை பதிகம்


Abiraamiyammai Pathikam

அபிராமியம்மை பதிகம்


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வழமையும் குன்றாத இளமையும்
கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!


16 செல்வங்கள் வேண்டி இப்பாடலைப் பாடி அபிராமியம்மையை வழிபட்டால், 16 செல்வங்களையும் பெறலாம்.

  1. கலையாத கல்வி
  2. குறையாத வயது
  3. கபடு வராத நட்பு
  4. குன்றாத வளமை
  5. குன்றாத இளமை
  6. கழுபிணியிலாத உடல்
  7. சலியாத மனம்
  8. அன்பகலாத மனைவி
  9. தவறாத சந்தானம்
  10. தாழாத கீர்த்தி
  11. மாறாத வார்த்தை
  12. தடைகள் வராத கொடை
  13. தொலையாத நிதி
  14. கோணாத கோல்
  15. துன்பமில்லாத வாழ்வு
  16. மிகுந்த இறையன்பு




சைவ சமய அறிவைப் பரீட்சிக்கும் இலகு பரீட்சை

சைவநெறி


சைவநெறிப் பரீட்சை MCQ

சைவநெறி பாடத்திற்கான சில Miltiple choice பயிற்சிகள் தரப்பட்டுள்ளன, மேலே   காணப்படும் Button  களில் முதலில் Get Question ஐ அழுத்தி எல்லாக்  கேள்விகளுக்கும்  விடையளித்து, பின்னர் Check with Answer ஐ அழுத்தி விடைகளையும் புள்ளிகளையும் பெறுக.





மாணிக்கவாசகர் வரலாறும் அற்புதங்களும் சுருக்கம்

மாணிக்கவாசகர் வரலாறு சுருக்கம் - சைவநெறி

மாணிக்கவாசகர் வரலாறு சுருக்கம்

இவர் சமயகுரவர்கள் நால்வருள் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாதவூர் ஆகும். இவரது அறிவாற்றலைக் கண்டு கொண்ட பாண்டிய மன்னன் தனது அரச சபையிலே பிரதம மந்திரியாக நியமித்தார். அப்பதவியை வகித்தபோது மன்னன் கட்டளைப்படி குதிரைகள் வாங்க சென்றபோது திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரு பெரும் நூல்கள் இவரால் அருளப்பட்டவை. இவை எட்டாம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவரது திருவாசகம் சிவனையே உருக வைத்தவை ஆகையால் நாம் எம்மாத்திரம், அதனால்த்தான் "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற கூற்று உருவாகியது.

நாடுபாண்டி நாடு
ஊர்திருவாதவூர்
தாய்சிவஞானவதியர்
தந்தைசம்புப் பாதாசிரியர்
வேறு பெயர்கள்திருவாதவூரர்
ஆளுடைய அடிகள்
மணிவாசகர்
கோவை வேந்தர்
முதலில் பாடிய பதிகம்நமச்சிவாய வாழ்க ...
கடைசியில் பாடிய பதிகம்தானெனை முன்...
திருமுறை வகுப்பு8
முத்திபெற்ற தலம்தில்லைச் சிதம்பரம்
முத்தியடைந்த வயது32
முத்தியடைந்த தினம்ஆனி மகம்
வாழ்ந்த காலம்கி.பி. 8ம் நூற்றாண்டு


அவர் செய்த அற்புதங்கள்
  • சிவனே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண் சுமந்து அடிபடும் படியும் செய்தது.
  • புத்தர்களைத் தருக்கத்திலே வென்று ஊமைகளாக்கி பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது.
  • ஊமையாய் இருந்த பெண்ணை பேச வைத்து, புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்ல வைத்தது.
  • தம்முடைய திருவாசகத்தையும், திருக்கோவையையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து பெற்றுக்கொண்டது.
  • எல்லோரும் காணக் கனகசபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.




சுந்தரர் வரலாறும் அற்புதங்களும் சுருக்கம்

சுந்தரர் வரலாறு சுருக்கம் - சைவநெறி

சுந்தரர் வரலாறு சுருக்கம்

சுந்தரர் 8ம் நூற்றாண்டில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவர். அவர் பாடிய தேவாரங்கள் 7ம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவர் திருநாவலூர் என்னும் ஊரில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரன்.

நாடுதிருமுனைப்பாடி
ஊர்திருநாவலூர்
தாய்இசையானியார்
தந்தைசடையனார்
வேறு பெயர்கள்நம்பியாரூரர்
திருநாவலூரர்
வன்தொண்டர்
தம்பிரான் தோழர்
ஆளுடைய நம்பி
முதலில் பாடிய பதிகம்பித்தாப் பிறை சூடி ...
கடைசியில் பாடிய பதிகம்தானெனை முன்...
திருமுறை வகுப்பு7
முத்திபெற்ற தலம்திருவஞ்சைக்களம்(திருக்கயிலை)
முத்தியடைந்த வயது18
முத்தியடைந்த தினம்ஆடிச்சோதி
வாழ்ந்த காலம்கி.பி. 9ம் நூற்றாண்டு


அவர் செய்த அற்புதங்கள்
  • செங்கட்டிகளைப் பொன்கட்டிகளாக்கியது.
  • ஆற்றிலே இட்ட பொன்னை குளத்திலே எடுத்தது.
  • காவேரி ஆறு பிரிந்து வழிவிடச் செய்தது.
  • முதலை விழுங்கிய பிள்ளையை முதலை வாயினின்று அழைத்துக் கொடுத்தது.
  • வெள்ளை யானையில் ஏறிக் கொண்டு திருக்கைலாயத்திற்கு எழுந்தருளியது.
  • பரவையார் பொருட்டு இறைவனைத் தூது விடுத்தது.




திருநாவுக்கரசர் வரலாறும் அற்புதங்களும் சுருக்கம்

திருநாவுக்கரசர் வரலாறு சுருக்கம் - சைவநெறி

திருநாவுக்கரசர் வரலாறு சுருக்கம்

நாடுதிருமுனைப்பாடி
ஊர்திருவாமூர்
தாய்மாதினியார்
தந்தைபுகழனார்
தமக்கையார்திலகவதியார்
வேறு பெயர்கள்மருணீக்கியார்
வாகீசர்
தாண்டகவேந்தர்
அப்பர்
உழவாரப் படையாளி
ஆளுடைய அரசர்
தருமசேனர் (சமணர்கள் இட்ட பெயர்)
முதலில் பாடிய பதிகம்கூற்றாயினவாறு விலக்ககலீர் ...
கடைசியில் பாடிய பதிகம்எண்ணுகேன்...
திருமுறை வகுப்பு4, 5, 6
முத்திபெற்ற தலம்திருப்புகலூர்
முத்தியடைந்த வயது81
முத்தியடைந்த தினம்சித்திரைச் சதயம்
வாழ்ந்த காலம்கி.பி. 7ம் நூற்றாண்டு


அவர் செய்த அற்புதங்கள்
  • சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையிலே பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது.
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது பிழைத்தது.
  • சமணர்கள் விடுத்த யானை இவரைக் கொல்லாமல் வலஞ் செய்து வணங்கியது.
  • சமணர்கள் கல்லிலே கட்டி சமுத்திரத்திலிடக் கல் தோணியாக மிதந்தது.
  • சிவபெருமானிடம் படிக்காசு பெற்றது.
  • வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடியது.
  • நஞ்சினால் இறந்த அப்பூதியடிகளின் பிள்ளையை உயிர்ப்பித்தது.
  • கயிலையில் ஒரு வாவியில் முழுகித் திருவையாற்றிலே உள்ள குளத்தில் கரையேறியது.



திருஞானசம்பந்தர் வரலாறும் அற்புதங்களும்

திருஞானசம்பந்தர் வரலாறு சுருக்கம் - சைவநெறி

திருஞானசம்பந்தர் வரலாறு சுருக்கம்
நாடுசோழநாடு
ஊர்சீர்காழி
தாய்பகவதியார்
தந்தைசிவபாதவிருதயர்
வேறு பெயர்கள்கவுணியர்கோன்
காழிவேந்தர்
பரமசமய கோளரி
பாலறாவாயர்
ஆளுடைய பிள்ளை
முதலில் பாடிய பதிகம்தோடுடைய செவியன் ...
கடைசியில் பாடிய பதிகம்காதலாகிக் கசிந்து...
திருமுறை வகுப்பு1, 2, 3
முத்திபெற்ற தலம்திருப்பெருமண நல்லூர்
முத்தியடைந்த வயது16
முத்தியடைந்த தினம்வைகாசி மூலம்
வாழ்ந்த காலம்கி.பி. 7ம் நூற்றாண்டு


அவர் செய்த அற்புதங்கள்
  • 3 வயதிலே உமாதேவியார் பொற்கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.
  • சிவனிடம் பொற்றாளம், முத்துப்பல்லக்கு, முத்துச்சின்னம், முத்துக்குடை, முத்துப்பந்தர், உலவாக்கிழி, படிகாசு பெற்றது.
  • பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியது.
  • பாண்டியனுக்கு கூனையும், சுரத்தையும் போக்கியது.
  • சமணகளுக்கெதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டு பச்சையாக எடுத்தது.
  • வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிரேறும்படி செய்தது.
  • ஆற்றிலே தாமும், அடியார்களும் ஏறிய ஓடத்தை திருப்பதிகத்தினால் கரை சேர்த்தது.
  • பாம்பு தீண்டிய விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.
  • இறந்த பெண்ணுடைய எலும்பைப் பெண்ணாக்கியது.
  • தமது திருக்கல்யாணத்தைத் தரிசிக்க வந்தவர்கள் எல்லோரையும் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.



பன்னிரு திருமுறைகள் அட்டவணை

பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு அட்டவணை

பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு அட்டவணை


இவை சைவசமயத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள நூல்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் சிவபக்தியை உருவாகக் கூடிய பாடல்களால் ஆனவை. இவை தமிழர்களின் பக்தி இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாது சைவநெறி, தமிழ் மொழி, இலக்கியம், மற்றும் இசை என  நான்கு துறைகளின்  வளர்ச்சிக்கும் பன்னிரு திருமுறைகள் ஆற்றிய பங்கு அளப்பெரியது. 

இந்த தொகுப்பை 10ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி தொகுத்துள்ளார்.

தெய்வீக உணார்வு பெருக, சமய ஒழுக்கத்தைப் பேணும் நோக்கத்துடன் தொகுக்கப்பட்ட உயர்வான நூல்களின் தொகுதியே திருமுறைகளாகும். திருமுறைகளை தமிழ்வேதம், தமிழ்மறை எனவும் அழைப்பர்.

திருமுறைகளைத் தொகுத்தவர் : நம்பியாண்டார் நம்பி
திருமுறைகளைத் தொகுப்பித்தவர் : முதலாம் இராஜராஜ சோழன்



திருமுறைதிருமுறையின்
பெயர்
ஆசிரியர்ஆசிரியர்
தொகை
1
2
3
தேவாரம்திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார்
1
4
5
6
தேவாரம்திருநாவுக்கரசு
நாயனார்
1
7
தேவாரம்சுந்தரமூர்த்தி
நாயனார்
1
8
திருவாசகம்
திருக்கோவையார்
மாணிக்கவாசக
சுவாமிகள்
1
9
திருவிசைப்பா











திருப்பல்லாண்டு
திருமாளிகைத்தேவர்
சேந்தனார்
கருவூர்த்தேவர்
நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தமநம்பி
சேதிராயர்


சேந்தனார்
9
10
திருமந்திரம்திருமூலர் 1
11
40 பிரபந்தம்திருவாலவாயுடையார்
காரைக்காலம்மையார்
ஐயடிகள் காடவர்கோன்
சேரமான் பெருமாள்
நக்கீரதேவர்
கல்லாடதேவர்
கபிலதேவர்
பரணதேவர்
இளம்பெருமானடிகள்
அதிராவடிகள்
பட்டினத்து அடிகள்
நம்பியாண்டார் நம்பி
12
12
பெரியபுராணம்சேக்கிழார்1

விநாயகர் அகவல் முழுப் பாடல் வரிகள் | மகிமையும் வரலாறும் | PDF பதிவிறக்கம்

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப்  பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.

இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி" என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் ஔவையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?" என்றார்.

"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ" என்றார் ஔவையார்.

"ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு" என்றதும், "சீதக்களப" என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! ⁠



சிவபுராணம் முழு பாடல் வரிகள் | மகிமையும் வரலாறும்| PDF பதிவிறக்கம்

Sivapuraanam

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். ‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என  சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.




சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)


திருசிற்றம்பலம்
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்




அபிராமி அந்தாதி முழு பாடல் வரிகள் | மகிமை, வரலாறு மற்றும் PDF பதிவிறக்கம்

அபிராமி அந்தாதி
அபிராமி பட்டர் வரலாறு
அபிராமி அந்தாதி  அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது. அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர்.

அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர்  ஆண்டு வந்தார். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்தி க்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர்,  ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.

அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார்.  மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி,  “இவர் யார்?” என்று கேட்டார்.  அருகில் இருந்தவர்கள்,  “இவர் ஒரு பித்தர்;  தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி,  “இன்று பௌர்ணமி” என்றார்.

தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி,   அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்”  என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.

"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது(79) பாடலாகிய,  “விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன" என்ற பாடலை பாடிய உடன்,  ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன்.  நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற' என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.



அபிராமி அந்தாதி


கணபதி காப்பு
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

1
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

2.
துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

3.
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

4.
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

5.
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

6.
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

7.
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

8.
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

9.
கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

10.
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

11.
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.

12.
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

13.
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

14.
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.

15.
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

16.
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

17.
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

18.
வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.

19.
வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

20.
உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

21.
மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.

22.
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.

23.
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

24.
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

25.
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி <உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

26.
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

27.
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

28.
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

29.
சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் ,வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

30.
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!

31.
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

32.
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

33.
இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

34.
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

35.
திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

36.
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!

37.
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

38.
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

39.
ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

40.
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

41.
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

42.
இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.

43.
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

44.
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

45.
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.

46.
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!

47.
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

48.
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

49.
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

50.
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

51.
அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

52.
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

53.
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.

54.
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

55.
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.

56.
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

57.
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.

58.
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

59.
தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

60.
பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?

61.
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

62.
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.

63.
தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

64.
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

65.
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!

66.
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

67.
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.

68.
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.

69.
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

70.
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

71.
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

72.
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

73.
தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.

74.
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

75.
தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

76.
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.

77.
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.

78.
செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே.

79.
விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.

80.
கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

81.
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.

82.
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன்.

83.
விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

84.
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

85.
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.

86.
மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.

87.
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே.

88.
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்
தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!

89.
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் <உறவற்ற, அறிவு
மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

90.
வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

91.
மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.

92.
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.

93.
நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

94.
விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே.

95.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

96.
கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

97.
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

98.
தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே.

99.
குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

100.
குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

-அபிராமி பட்டர்



திருவெம்பாவை முழுப் பாடல் வரிகள் | பாடல் சிறப்பு மற்றும் PDF பதிவிறக்கம்

திருவெம்பாவை

திருவெம்பாவை

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

பனி நிறைந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பொழுது புலர்வதற்கு முன் எழுந்து, ஒருவரையொருவர் துயிலெழுப்பி கூட்டமாகச் சென்று பொய்கையில் நீராடி இறைவன் புகழ்பாடி வழிபடுவதை திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிடுகின்றார்.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. திருவெம்பாவை, சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது . திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.


திருவெம்பாவை

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேல் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற் றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்

பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தார் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையர்க் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்

கந்த சஷ்டி கவசம் முழு வரிகள் | மகிமை விளக்கம் | PDF பதிவிறக்கம்

கந்தசஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி "காக்க" இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆதலினால் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும்.

கந்த சஷ்டி கவசம்

காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெற்றி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!


-பால தேவராய சுவாமிகள்